Welcome to Thevar History 

Spears, Royal moustache, Guradian role - வெற்றி வேல் வீர வேல் .

Seka Veera Pandian (1886)

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை 1801ம் ஆண்டு ஆங்கிலேயப் படையினர் சுற்றி வளைத்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் வழியிலே வந்த, அறுபது வயதைத் தாண்டிய அஞ்சா நெஞ்சம் படைத்த ஒருவர், தமிழ் மண்ணைக் காப்பாற்ற தன் இன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பேராண்மையுடன் போர் புரிந்தார். ஆங்கிலேய படைவீரன் ஒருவன் அவர் மீது குண்டு ஒன்றைப் போட்டான். அதனால் குற்றுயிராய், அருகில் இருந்த வயல் வரப்பில் வீழ்ந்தார் அந்த முதியவர். அப்போது குதிரை மீது வந்துகொண்டிருந்த மற்றொரு ஆங்கிலேயப் படைவீரன், அம்முதியவரது கையில் வீரவாள் இருப்பதைக் கண்டு அதைத் தன்னிடம் தருமாறு அதட்டினான். அதற்கு அவர், "என்னால் எழுந்திருக்க முடியாது; நீயே குனிந்து வாங்கிக்கொள்," என்றார். வாளை வாங்க அவன் குனிந்தபோது, தம் கையிலிருந்த வாளை ஓங்கி படைவீரனின் தலையையும் அவன் ஏறிவந்த குதிரையையும் கொன்று வீழ்த்தினார் அம்முதியவர். சில வினாடியிலேயே அவர் உயிரும் பிரிந்தது. இது பொய்யோ பழங்கதையோ அல்ல; உண்மை நிகழ்ச்சி. 

"போர்க்குறிக் காயமே புகழின் காயம்," என்று எண்ணிய அத்தமிழ் வீரனின், மறக்குடியில் தோன்றிய மாபெரும் புலவர் ஏறே "கவிராச பண்டிதர்" எனப் போற்றப்பட்ட செகவீரபாண்டியனார். 

தென்னகத்தில், கோயில்பட்டிக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட ஊர் மணியாச்சி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு பெற்ற சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. இத்தகைய ஊருக்கு அருகில் உள்ளது ஒட்டநத்தம். இதை "சின்னப் பாஞ்சாலங்குறிச்சி" என்றும் கூறுவர். இவ்வூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தில் தோன்றிய பெருமாள்சாமி என்பவருக்கும் ஆவுடையம்மைக்கும் 10.3.1886ல் பிறந்தவரே கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார். 

இவரது மூன்றாம் வயதில் தந்தை இறந்து போனார். எனினும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். தொடர்ந்து படிக்க முடியாத சூழல்; எனினும், 
ஆத்திசூடி, 
கொன்றை வேந்தன், 
மூதுரை, 
திவாகரம் 
முதலானவற்றைப் படித்து நல்ல புலமை பெற்றார். இடையே மற்போர், விற்போர் முதலானவற்றையும் கற்றுக்கொண்டார். ஒருநாள் ஊர்க் குளக்கரை வழி வரும்போது, ஓலைச்சுவடி ஒன்றைக் கண்டெடுத்தார்; அதில் பின்வரும் பாடலடிகள் இருந்தன: 
"சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை 
 ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்."


இதனைப் படித்ததும் கல்வியினால்தான் அறிவுடையோராக ஆதல்கூடும் என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் கல்வியில் ஆர்வம் கொண்டு தாயுமானவர் பாடல் முதல் பல்வேறு நூல்களைத் தாமாகவே படித்தார். தமிழின் மீதும் சைவத்தின் மீதும் தணியாக் காதல் உண்டாயிற்று.


அரிமளம் என்ற ஊரிலிருந்து சிவானந்த சுவாமி என்பவர் இவரது ஊருக்கு வந்திருந்தார். செகவீர பாண்டியனாரைக்கண்டு, "எம் ஊரில் ஓர் ஆசிரமம் உள்ளது, அங்கு வரலாமே," என்று கூற, பாண்டியனாரும் தம் அன்னையின் இசைவு பெற்று அரிமளம் சென்றார். ஓராண்டு துறவிபோல் வாழ்ந்தார். வேதாந்த நூல் பலவும் கற்றுத் தெளிந்தார். மகனைப் பிரிந்திருக்க முடியாத அன்னையார் ஊருக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்த, ஒட்டநத்தம் திரும்பினார். தமிழில் பெரும் புலமை பெறவேண்டும் என எண்ணினார். இலக்கண முத்துக்கவிராயரிடம் தமிழ் கற்றார். தமது 19ம் வயதிலேயே "ஆசிரியர்" என்று அனைவரும் போற்றும் நிலைக்கு உயர்ந்தார். 

பாண்டியனார், நாநலம் மிக்கவர். சிறந்த புராணச் சொற்பொழிவாளர் எனும் புகழைப் பெற்றவர். 
கம்பராமாயணம், 
பெரியபுராணம் 
ஆகியவற்றை மொழிவதில் வித்தகராக விளங்கினார். அக்காலத்தில் தமிழகத்துப் பட்டிதொட்டியெல்லாம் இவர் புகழ் பரவியது எனில் மிகையன்று.


பாண்டியனார் தம் 27ம் வயதில் வெள்ளைத்தாய் என்னும் மங்கையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார். தென்பாண்டி நாட்டில் பல ஊர்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றிவந்தார். ஆனாலும் இத்தகைய பேச்சுகள் காற்றோடு காற்றாகப் பயனின்றிப்போகும் என்று உணர்ந்தவர், நூல் எழுதுவதே தக்க பணி என்று எண்ணினார். 
மதுரை மேலமாசி வீதியில் தங்கி, தாம் வசித்த இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு "வாசுகி அச்சகம்" என்றும் பெயரிட்டார். எவரையும் வேலைக்கு அமர்த்தாமல் அச்சுக் கோர்ப்பது முதலான பணிகளைத் தாமே செய்தார். பாண்டியனார் கவி புனைவதில் வல்லவர். இவரது உரைநடையும் கவிதையின் சாயலாகவே இருக்கும். 1920ம் ஆண்டு கோவையை அடுத்த பேரூரில் கவிதைப் போட்டி ஒன்று நடந்தது. 
"பஞ்சாங்கம் பார்க்கப்படும்" எனும் ஈற்றடி கொடுத்து மூன்று மணித்துளிகளில் பாடலை நிறைவு செய்யவேண்டும் என்பது விதி. பாண்டியனார் அதில் கலந்துகொண்டு குறிப்பட்ட நேரத்திற்குள் பாடிய பாடல், 

"வான்மதியும் கான்மானும் வன்முயலும் பாதலத்தோர் 
 கோன்குலமும் தீயுமொன்றில் கூடுமோ - ஏன்கூடா 
 நஞ்சாங் கமரருய்ய நல்லமுதாக் கொண்டபரம் 
 பஞ்சாங்கம் பார்க்கப் படும்."
"வானில் உலாவும் சந்திரன், காட்டில் வாழும் மான், பூதலத்து வாழும் பாம்பு, தன்னையடுத்த பொருளைச் சுட்டெரிக்கும் நெருப்பு ஆகிய இவ்வைந்தும் ஓரிடத்தில் ஒன்றாய்க் கூடுமோ? கூடும். அமரர் உய்ய நஞ்சினை அமுதமாக உண்டு அருளிய சிவபெருமானின் தலை, கால், கை, நெற்றி, கழுத்து என்ற ஐந்து அங்கங்களையும் பார்த்தால் அவ்வைந்தும் ஒன்றுகூடி இருப்பது தெரியவரும் என்பது இப்பாடலின் பொருள்." 

பாண்டியனார் கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, 
மாசிலா மணிமாலை
அணி அறுபது
தருமதீபிகை
திருக்குறட் குமரேச வெண்பா
வீரபாண்டியம்
இந்தியத் தாய்நிலை
உலக உள்ளங்கள்
கம்பன் கலைநிலை
அகத்திய முனிவர்
கவிகளின் காட்சி
தமிழர் வீரம்
பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம்.


யாருடைய உதவியையும் நாடாமல், எந்தப் பதிப்பகத்தின் ஆதரவையும் விரும்பாமல், அரும்பெரும் நூல்களை எழுதியதோடன்றித், தம் இல்லத்திலேயே அச்சகத்தை உருவாக்கி, தம்நூலில் ஓரிடத்திலும் அச்சுப்பிழை வாராமல் தாமாகவே அனைத்தையும் பார்த்து நூல்களை வெளிக்கொணர்ந்தார்.


"தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும்" என்று கூறுவதுண்டு. இவ்விரு புலவர்களிடத்தும் பாண்டியனார் அளவற்ற பக்திகொண்டவர். அதனால்தான் திருக்குறள், கம்பராமாயணம் இவ்விரு நூல்களையும் ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளிக்கொணர்ந்தார். "திருக்குறளை உரையுடன் மட்டும் வெளியிட்டால் அத்துணையளவு பயனில்லை" என்று உணர்ந்த பாண்டியனார், ஒவ்வொரு குறளுக்கும் அதற்கேற்றவாறு கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறளோடு மேலும் இரண்டு அடிகள் சேர்த்து முழு வெண்பாவாகப் பாடியதோடு மட்டுமன்றி அதற்கான முழு விளக்கத்தையும் தந்துள்ளார். ஒவ்வொரு பாட்டிலும் "குமரேசா" எனும் விளி அமைந்திருக்கும். அதனால் இதற்குத் "திருக்குறட் குமரேச வெண்பா" என்று பெயர்.


ஆங்கில மொழியையும் தாமாகவே படித்துப் புலமை பெற்றவர். இரண்டு வரிகளில் ஆங்கிலத்தில் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர்.


வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தமிழ்த்திரை உலகில் பெரும்புகழ் பெற்றது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அந்தத் திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை எழுதிய (பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இதற்குச் சான்று) கவிராசபண்டிதர் செகவீரபாண்டியனார் பெயர் இடம்பெறவில்லை. தம் பெயரைக் குறிப்பிடாதது அறிந்து பெரிதும் வருந்தினார் பாண்டியனார். உண்மை அறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மதுரை வந்தபோது, பாண்டியனாரைக் நேரில் கண்டு உதவிசெய்ய முன்வந்தார். ஆனால், பாண்டியனார் வறுமை நிலையில் இருந்தபோதும் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.


17.6.1967ல் தாம் எழுதிய "உலக உள்ளங்கள்" என்ற நூலின் மறுபதிப்புக்குரிய அச்சுப்பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவம் பலனின்றி இறைவனடி சேர்ந்தார். 

தமிழகம், கவிராசபாண்டியனாரைத் தக்கவாறு போற்றத் தவறிவிட்டது என்றுதான் கூறவேண்டும். பாண்டியனாரின் நூல்களை அரசு நாட்டுடைமையாக்கி, அவர்தம் குடும்பத்தார்க்கு நிதி உதவி அளிப்பதே அவருக்கும், அவர்தம் தமிழுக்கும் செய்யும் உதவி எனலாம்.

நன்றி: முனைவர் ச.சாம்பசிவனார்

பாஸ்கர் தொண்டைமான் (1904)


நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா – முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

இவரது தந்தை வழிப் பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்றால், தகப்பனார் முத்தையாவோ தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற அறிஞர். இப்படிப்பட்ட மொழி ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்த பாஸ்கரத் தொண்டைமானுக்கு இயற்கையிலேயே தமிழில் நாட்டமும், கலைகளில் ஈடுபாடும் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

அன்றைய வழக்கப்படி, கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டுவிட்ட பாஸ்கரத் தொண்டமானின் மாணவர் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. கல்லூரி நாள்களில் பாஸ்கரத் தொண்டைமானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருவர்.

ஒருவர் தொண்டைமான் படித்த இந்துக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர்.

இன்னொருவர், “சொல்லின் செல்வர்” இரா.பி.சேதுப்பிள்ளை.இரா.பி.சேதுப்பிள்ளையின் தூண்டுதலின் பேரில்தான் பாஸ்கரத் தொண்டைமான் தனது கல்லூரி நாள்களிலேயே “ஆனந்தபோதினி” பத்திரிகையில் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார். கம்பனின் கவிதையில் காதல் வசப்பட்டவர்கள் இரசிகமணியின் இரசனை வட்டத்திற்குள் இழுக்கப்படுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே?

“இரசிகமணி’ டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பரிச்சயமும், அவருடன் அமர்ந்து கம்பனை வரிவரியாக இரசித்துப் படிக்கும் அனுபவமும் பாஸ்கரத் தொண்டைமானின் தமிழ்ப் பித்துக்கு மெருகும் உரமும் ஊட்டின. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற கையோடு, அரசு உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. இன்றைய “வனவள”த் துறைக்கு அப்போது “காட்டிலாகா” என்று பெயர். காட்டிலாகாவில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, பாஸ்கரத் தொண்டைமான் வருவாய்த் துறை ஆய்வாளரானார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், மாவட்ட உதவி ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார் அவர்.

இவரது சேவையைக் கருதி, அரசு இவரை இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) தகுதியை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது.1959ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாஸ்கரத் தொண்டைமான் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டார். தமது பாரம்பரியமான வீட்டில் தங்கி தமது இலக்கியப் பணியைக் கடைசிக் காலம்வரை தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல, அவர் எழுதிக் குவித்ததும் ஏராளம் ஏராளம். பாஸ்கரத் தொண்டைமான் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் அரசுப் பணியுடன் தமிழ்ப் பணியும் ஆற்றினார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு.

தஞ்சையில் அவர் பணி புரிந்தபோது அங்கே கிடைத்தற்கரிய கலைச் செல்வங்களும், சிற்பப் படிவங்களும், சரித்திரத்தின் அடிச்சுவடுகளும் கேள்வி கேட்பாரற்று வீணாகிப் போவதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவைகளை எல்லாம் முறையாக சேமித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துத் தமிழரின் சரித்திரத்துக்கு வலு சேர்த்த பெருமை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுடையது!

நெல்லை வண்ணாரப்பேட்டையில் அப்போதெல்லாம் தமிழகமெங்கும் உள்ள தேர்ந்தெடுத்த இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஒன்றுகூடும் இடம் “இரசிகமணி” டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீடு. சாரல் பருவம் வந்துவிட்டால், இவர்கள் குற்றாலத்தில் இருக்கும் இரசிகமணியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் நடு முற்றமாக வட்டவடிவில் அமைந்த தொட்டிக்கட்டு அமைப்பில்தான் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரசிகமணியின் நண்பர் வட்டம் கூடும். அவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவர், சங்க இலக்கியம் என்று இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்தில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தனது நண்பர் வட்டத்தைக் கூட்டி இலக்கியக் கழகம் என்ற பெயரில் இலக்கிய ஆய்வுகள் நடத்துவாராம். அதேபோல, இலக்கிய ஆய்வு நடத்தும் திருநெல்வேலியிலுள்ள இரசிகமணியின் நண்பர் வட்டம், “வட்டத் தொட்டி” என்று வழங்கலாயிற்று.

வட்டத் தொட்டியின் தலைவர் இரசிகமணி டி.கே.சி. என்றால் அதன் தூண்களில் ஒருவராகச் செயல்பட்டவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

 • “கம்பர் அடிப்பொடி” சா.கணேசன்
 • மு.அருணாசலப் பிள்ளை
 • நீதிபதி மகாராஜன்
 • மீ.ப.சோமு
 • நாமக்கல் கவிஞர்
 • “கவிமணி” தேசிக விநாயகம் பிள்ளை
 • தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான ஆ.சீனிவாச இராகவன்
 • ஏ.சி. பால் நாடார் மற்றும்
 • வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்

போன்ற பல தமிழறிஞர்கள் “வட்டத் தொட்டி”யில் அடிக்கடி பங்கு பெறும் தமிழார்வலர்கள்.மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுத்தாளர் கல்கி ஆகிய இருவரும் சற்று ஓய்வு கிடைத்தாலும் நெல்லையிலுள்ள இரசிகமணியின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து விடுவார்கள்.

அவர்களும் சேர்ந்து கொண்டால், வட்டத் தொட்டியின் கலகலப்புக்கும், இலக்கிய சர்ச்சைக்கும் கேட்கவே வேண்டாம். இந்த இலக்கிய சர்ச்சைகளில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் பங்களிப்பு மிகவும் அதிகம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் எண்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நெல்லையிலுள்ள நண்பர்கள் முடிவெடுத்து ஒரு விழா எடுப்பது என்று தீர்மானித்தனர்.

“வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு” என்பது இரசிகமணியின் கருத்து. அவரே “தமிழ்த் தாத்தா” உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார். இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான “மகா மகோபாத்தியாய” டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.

விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:- “என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள். நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது. என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும், உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான். பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து “என்னை ஆண்டான்” என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் “பிள்ளையாண்டான்” என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!”

இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. “தமிழ்த் தாத்தா” தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் “தம்பி” என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார்.

“தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், “தம்பி” என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!” என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் “வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தலைப்பில் “கல்கி” வார இதழில் தொடராக வந்தது.

 • வேங்கடத்துக்கு அப்பால்
 • பிள்ளைவாள்
 • தமிழறிஞர் முதலியார்
 • இரசிகமணி டி.கே.சி.
 • கலைஞன் கண்ட கடவுள்
 • கல்லும் சொல்லாதோ கவி
 • அமர காதலர்
 • தென்றல் தந்த கவிதை
 • தமிழர் கோயில்களும் பண்பாடும்
 • கம்பன் கண்ட இராமன்
 • அன்றும் இன்றும்

என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம்.

இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. இரகுநாதன் இவருடைய இளைய சகோதரர்.

நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு இரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள்,

 • தொண்டைமான்
 • மகாராஜன்
 • ஆ.சி.ரா.

போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள்.

இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!

தமிழும், கலையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

ஆனால், வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!