Welcome to Thevar History 

Spears, Royal moustache, Guradian role - வெற்றி வேல் வீர வேல் .

Maruthu Pandiyars

மருதுபாண்டியர்


பெரிய மருது:


பிறப்பு: 1748

தந்தை  : உடையார்த் தேவர் 

தாய்: ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள்

இறப்பு: 1801அக்டோபர் 24


சின்ன  மருது:


பிறப்பு: 1753

தந்தை  : உடையார்த் தேவர் 

தாய்: ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள்

இறப்பு: 1801அக்டோபர் 24


சொந்த ஊர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம்
மருது பாண்டியர் ஜெயந்தி: அக்டோபர் 27:


அகமுடையார் இனத்தை சார்ந்தவரான உடையார்த் தேவர்  சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார்,   உடையார்த் தேவர்வருடன்  சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி  உடையார்த் தேவர் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். உடையார்த் தேவர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், உடையார்த் தேவர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.


மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது

மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்:


ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.
தொடரும் . . . . . . . .


வீரமும் திறமையும் வெளிப்படுதல்


சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார். தொடரும் . . . . .. .


முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்


சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.

இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.

வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.


இந்த காலக் கட்டத்தில்
 மருது சகோதரர்களின் தீவிரவாதத் திட்டம் 3 :

விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.
இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்.


சிவகங்கைச் சீமை மீட்பு - 4:1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.


மருது பாண்டியர் ஆட்சிப் பொறுப்பு:


அரசி வேலுநாச்சியாருக்கு ஆண் மகவு இல்லை. மேலும் அவர் அடிக்கடி நோய்பட்டிருந்தார் மனம் நொந்த நிலையில் இருந்தார். ஆண் வாரிசு இல்லாத தனது அரசுக்கு தனத தாதையர்களும் கும்பினியாரும் தொல்லை கொடுக்கக் கூடும் என்பதை உணர்ந்து சிவகங்கைச் சீமையை தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதர்களிடம் ஒப்படைக்க முன்வந்தார். தளபதி சந்தன ராசாவும் அதற்கு இசைவு தந்தார். தனது ஆபத்துகால நண்பனான ஹைதர்அரலியின் விருப்பத்துடன் செய்வதாக வேலு நாச்சியார் கூறினார். அதற்கு மருது சகோதரர்கள் எப்படி தாதாதையர்கள் ஏற்பர் என்று வாதிட்டனர்.”எனது மறைவிற்குப் பிறகு நாடும், மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அரசர்களாக வேண்டாம், அரசின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நடத்துங்கள்”
என்று கூறி சம்மதிக்க வைத்தார். உடனே அரண்மனை விழாக்கோலம் காண ஏற்பாடாயிற்று. மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அந்த விழாவில் அன்பும் பாசமும் கொண்ட மருது சகோதரர்களை நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசப் பிரதிநிதிகளாக நாட்டை நிர்வாகம் செய்வார்கள் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி நடந்தது 1780ல் 1793ல் வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறாள் . 1796ல் வேலுநாச்சியாரும் இறந்து விடுகிறார். அதன் பிறகு பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் அவர்கள் இறக்கும் வரை ஆண்டு வருகின்றனர். சந்தனராசா தளபதியக தொடர்கின்றார்.


அறப்பணிகளும் மக்கள் தொண்டும்:


வெலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு அரசியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மருது சகோதரர்களை அழைத்து, தனது கணவர் விரும்பிய அறப்பணிகள் தொடர வேண்டும், காளையார் கோவில் மீண்டும் சீரமைக்க வேண்டும் , மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளைச் செய்ய வேண்டும், என்று கூறினார். அதனை ஏற்று முதன் முதலில் காளையார் கோவிலை சீரமைத்தனர். அக்கோவிலில் மருது சகோதரர்களின் சிலைகள் யானை கட்டி மண்டப வாயில் வைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவில் உயர் கோபுரத்திற்கு இணையான முகப்புக் கோபுரத்தைக் கட்டினார்கள். குன்றக்குடி முருகன் கோவில் , ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புனரி சேவகப் பெருமாள் கோவில், ஆகிய திருக்கோவில்களுக்கு சீரமைப்பு, திருப்பணிச் செலவு ஆகியவற்றை நல்கி உள்ளனர். காஞ்சி சங்கரமடத்திற்கு முத்து வடுகநாதர் பெயரில் தானம் வழங்கப் பட்டதாக செப்பேடு செய்தி ஒன்றும் உள்ளது.

குன்றக்குடியில் அரண்மனை ஒன்றையும் கட்டினர். மருதுபாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்று இருந்ததாகவும் அதன் மூலம் தமிழ் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. மயூரிக் கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நரிக்குடியில் கற்புக்கரசி பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. பெரிய மருதுவின்மமைவியர் ஐந்து பேருக்கும் அங்கு சிலைகள் வைக்கப்பட்டன. மருதுபாண்டியர் கலைகளையும் வளர்த்தனர். நாடக கலை வளர்ச்சி பெற்றதாகவும் கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார்.
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மருதுபாண்டியர் தேர் வழங்கியுள்ளனர், இதைப் போல் பல கோவில்களுக்கும் தேர்கள் அளித்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார சிலைகளை சமீபத்தில் தான் சீரமத்துள்ளனர். சருகனியில் மாதாகோவிலுக்கு தேர் செய்து கொடுத்து பாரி வள்ளல்களானார்கள் . சிவகங்கை ஆட்சியை மீண்டும் பிடித்து வேலுநாச்சியார் ஆட்சிப் பொறுப்பேற்றபொழுது நிதிநிலை சீர் கெட்டிருந்தது. இதை எதிர்க் கொள்ள வேண்டி ; திருவிதாங்கூரில் தங்களுக்கு வேண்டாத அந்த மன்னன் நடத்திய மல்யுத்த போட்டிகளில் மாறுவேடமணிந்து கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பரிசாக கிடைத்த பெருந்தொகையினை சிவகங்கை அரசின் நிதி நிர்வாகத்தைச் சீர்படுத் செலவிட்டனர்.


பெரிய மருது காளையார் கோவிலுக்குத் தேர்கள் செய்ய திருப்புவனம் நதிக்கரையில் இரண்டு உயரந்த மருத மரங்கள் உள்ளதை அறிந்து, அவற்றை வெட்டிக் கொண்டுவர ஆண் வீரர்களை அனுப்பினார். அவற்றை வெட்ட விடாது குருக்கள் ஒருவரும் அவர் மகளும் தடுப்பதை அறிந்து பெரிய மருது மாறுவேடத்தில் நேரில் சென்று குருக்களிடம் காரணம் கேட்க, அவர்கள் அவ்விரு மரங்களையும் பெரிய மருது சின்ன மருதுவாகப் பாவித்து வளர்ப்பதாகவும் பூசை செய்வதாகவும் கூறினர் அது கேட்டு அவர்களது பாசத்தை உணர்ந்தார். மரங்களை வெட்டாது இருவரையும் அரண்மணைக்கு அழைத்து வந்து தங்க வைத்தக் கொண்டார். இது மக்களிடையே மருது சகோதரர்களுக் இருந்த மரியாதையை எடுத்துக் காட்டுகிறது.

காளையார் கோவிலுக்குச் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.


பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து............................................


வீரபாண்டிய கட்டபொம்மன் வீழ்சி:


மருது சகோதர்களின் வீரத்திற்கு முன் வெள்ளையரின்போர்த்திறமை வெற்றி பெறவில்லை. வெள்ளையர்கள் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தனர். அப்பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தான். இரவோடு இரவாக எட்டப்பனின் சூழச்சியால் பானர்மேனின் ஆங்கிலப் படைகள் பீரங்கிகள் உதவியுடன் பாஞ்சாலங் குறிச்சிக்குள் புகுந்தது. இதை சற்றும் எதிர்பாராத வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமைத்துரை ஆகியோர் தாக்கப்பட்டு கட்ட பொம்மன் அவன் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
ஊமைத்துரை தப்பித்து உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட சிவகங்கைச் சீமைக்கு வந்து சின்னமருதுவை சந்தித்து நடந்த விவரங்களைக் கூறினான். பெரிய மருது மனம் துடித்தார். சின்னமருது பொங்கி எழுந்தார். நம்மை நம்மவர்களே காட்டிக்கொடுக்கும் இழிநிலை இருப்பதால்தான் கட்டபொம்மனுக்கு தோல்விஏற்பட்டுள்ளது என்று பெரிய மருது வருந்தினார். ஊமைத்துரைக்கு தாம் அடைக்கலம் கொடுத்தால் வெள்ளையர் தம்மீது வெறுப்பு கொண்டு போர்த் தொடு்க்கலாம் எனவே அவசர அவசரமாக சில மாறுப்பட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அமராவதிப் புதூர் கோட்டையை வலுவுடையதாக்கி ஊமைத்துரையை அங்கு தங்க வைத்தனர். திருமயம் கோட்டையையும் ஊமையன் கோட்டையும் தரப்பட்டது. பெரியமருது எதிர்பார்த்தது போலவே, வெள்ளையர்களின் போக்கு பிடிக்காமல் ஆர்காடு நவாப் உம்தார்-உல் உத்ரா மருது சகோதரர்களுக்கு உதவுவது என்று முடிவெடுத்து ஊமைத்துரையை விடுவிக்காவிட்டால் வெள்ளையர்கள் போர்தொடுக்க இருக்கிறார்கள் என்றும், கட்டபொம்மனின் குடும்பத்தை பாளையங்கோட்டைச் சிறையில் வைத்துள்ளதாகவும் கடிதம் அனுப்பி இருந்தான். கட்டபொம்மனின் குடும்பத்தை சின்ன மருது காப்பாற்ற வேண்டுமென்று முடிவெடுக்கப் படுகிறது. அப்பொழுது வெள்ளையன் கர்னல் சுமித்திடமிருந்து ஓலை ஒன்று ஆங்கில வீரன் கொண்டு வந்து கொடுத்தான்.
அவ்வோலையில், ஊமைத்துரையை உடனே வெள்ளையரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லைவிட்டால் வெள்ளையரரின் எதிர்ப்பு ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது.
ஊமைத்துரையை ஒப்படைக்கு இயலாது எதிர்ப்பை எதிர்கொள்வதாகவும் ஆங்கில வீரனிடம் சொல்லி அனுப்பப்படுகிறது. அத்துடன் அன்று இரவே பாளையங்கோட்டை நோக்கி சின்னமருது உதயபெருமாள் தலைமையில் வீரர்கள் நாட்டு வெடிக்குண்டுகளுடன் மாறுவேடத்தில் செல்ல ஏறட்பாடாயிற்று.
காட்டில் இளைப்பாறிவிட்டு நடு இரவில் பாளையங்கோட்டையை அடைந்தனர். உதயப்பெருமாள் தலைமையில் சில வீரர்கள் கோட்டையைச் சுற்றி உள்ள காவலர்களை எதிர்க்க ஏற்பாடு செய்துவிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிரபாராத ஆங்கில வீரர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிறை வைக்கப்பட்டிருந்த வீரபாண்டியனின் குடும்பத்தார், சிறையிலிருந்து மீட்கப்பட்டனர். சிறைக் கூடமும் சின்னா பின்னமாக்கப்பட்டது. கட்டபொம்மனின் குடும்பத்தார் சிவகங்கை அரண்மனையில் சகல மரியாதைகளுடன் வைக்கப்பட்டனர். கட்ட பொம்மனின் குடும்பம் காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்து கவர்னர் வெல்ஸ்லி கடுங்கோபம் கொண்டான். அவனது ஆதராவால் தஞ்சையின் ஆட்சிக்கு வந்த சரபோசி மன்னனை தஞ்சையிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றுக் கொண்டு தஞ்சைக் கோட்டை, வல்லம் ஆகியவற்றை தஞ்சை மன்னனிடம் ஒப்படைத்தான். அடுத்ததாக தஞ்சை மன்னன் சரபோஜின் உதவியோடு சிவகங்கை மீது படையெடுக்க வெள்ளையர்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றை ஆர்க்காடு நவாப் பெரிய முருதுவுக்கு அனுப்பி இருந்தான். படையெடுப்பை எதிர்கொள்ள ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
திருமயம் கோட்டைக்கு சின்னமருது அனுப்பப்பட்டார். அங்கு எதிர்பாராத விதமாக தொண்டைமான் தளபதி சர்தார் கிருஷ்ணன் சின்னமருது, ஊமைத்துரை ஆகியவர்களிடம் சிக்கி மனம் மாறி தொண்டைமானுக்கு எதிராகச் செயல்பட அவர்களிடம் உறுதி அளித்தான். கட்டப் பொம்மனின் குடும்பத்தார் பத்திரமாக சிவகங்கை அரண்மனையில் இருப்பதை சின்னமருது சொல்லக் கேட்டு சின்னமருதுவைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
அதன் பிறகு ஊமைத்துரையின் தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் பெளர்ணமி நாளொன்றில் தாக்கப்பட்டது. வெள்ளையர் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். துறைமுகம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சர்தார் கிருஷ்ணன் எதிபாராத விதத்தில் வெள்ளைக் காரனின் துப்பாக்கிக் குண்டிற்கு இறையானான்.
இதைக் கண்ட ஊமைத்துரை கோபம் தலைக்கேறியது. துரை அக்னியூவைத் தேடினான். ஆனால் அவன் சில வீரர்களுடன் தப்பி விட்டான். மருது பாண்டியரின் உதவியால் தான் ஊமைத்துரை தூத்துக்குடியை அழித்தான் என்றறிந்த கர்னல் ஸ்மித் மருது பாண்டியரே ஆங்கிலேயர்களின் முதல் எதிரி என்று கருதினான்.


பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து..............................

ஆங்கிலேய படையெடுப்பு - 5:


இந்நிலையில் மருது சகோதரர்கள் உதயக்குமார் ஆகியோர் திருக் கோஷ்டியூர் சென்று வழிபட்டுவிட்டு , ஏரியூர் வழியாக குனறக்குடி சென்று முருகனை வழிபட்டனர். மலையை விட்டு இறங்கிய பொழுது தூரத்தில் படையொன்று அணிவகுத்து வருவதைக் கண்டனர். அப்படை சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனே மருதுபாண்டியர்கள் குறுக்கு வழியாக சிவகங்கைக்கு திரும்பினர். சிவகங்கைக்குத் திரும்பிய மருது சகோதரர்கள் போருக்கான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையில் திருச்சியிலிருந்தும் தஞ்சையிலிருந்தும் ஆங்கிலப் படை வீரர்கள் சிவகங்கை நோக்கி விரைந்தன.


போர் பிரகடனம்:


சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கச் சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சைமன்னன், இராமநாதபுரம் அரசர், மற்றைய பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த நிலையில் சிவகங்கைச் சீமை மட்டும் அவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. எப்படியும் சீமையை வீழ்த்தி வெற்றி பெறத் துடித்தது ஆங்கில கம்பெனி. இந்த நிலையில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு. ஒரு கடிதம் எழுதினான் அதில் ஆங்கிலேயர்களுக்குத் துணை நிற்பது மோசமான நிலையை உருவாக்கும், எனவே உனது ஆதரவை எனக்குக் கொடுத்து வெள்ளையரிடமிருந்து நாட்டைகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆதரவுக் கேட்டிருந்தான். சின்ன மருதுவோ நடக்க போகும் போரை எதிர்க்கொள்ள ஜம்புத் தீவு பிரகடனம் ஒன்றை தயார் செய்து திருவரங்கம் கோவில் கதவிலும் திருச்சி மலைக் கோட்டையிலும் ஒட்டி ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை பொக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர், என்று அறிவித்தார்.இதை அனுசரிக்காத முசல்மான்கள் (முஸ்லீம்) பன்றியின் இரத்தத்தை குடித்தவர்களாவர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆங்கிலேயர்களை மட்டுமின்றி, ஐரோப்பிய இழி பிறவிகளை ஒரு போதும் மன்னிக்காத, மருது பாண்டியன் என்று தன்னை அடையாளம் கொண்டிருந்தார். இந்த மாதிரி ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் வேறு எந்த அரசரோ பாளையக் காரர்களோ கண்டன அறிக்கை வெளியிட வில்லை. அந்த அளவுக்குத் துணிவும் இல்லை.


இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மைசூரில், மைசூர் போர்; மைசூர் போர்!!! என்றும், கர்நாடகப் போர் ; கர்நாகப் போர் !!! என்றும் குறிப்பிட்ட பெரிய போர்களைப் போல் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்கள் அநேகம். அவற்றில் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடபத்தக்கவை. இப்படி நடந்த போர்களை இக்கட்டுரையில் விவதாதிக்க இடம் போதாது. இந்த முறை 150 நாட்களுக்கு மேலாக போர் நடந்தன. அப்பொழுது மருது பாண்டியரை வெற்றி கொள்ள வேண்டுமானால் சிறுவயல், முத்தூர், சோழபுரம் ஆகிய மூன்று வழிகளில் சென்றால் காளையார் கோவிலை நெருங்கலாம் என்று உடையத் தேவன் உளவு கூறினான்.

அதன்படி காளையார் கோவிலை ஆங்கிலப் படை சுற்றி வளைத்தது. அவர்களின் பிடியிலிருந்து மருது சகோதரர்கள் காட்டுவழியே தப்பி மங்கலம் சென்றடைந்தனர்.


புரட்சிப் படையினர் பாதுகாப்புக் கொடுத்தனர். அப்படி தப்பி வரும் வழியில் களைப்புத் தீர பழையச் சோறு கொடுத்துதவிய மூதாட்டிக்கு ஒரு கிராமத்தைத் தானமாக ஓலையில் எழுதிக் கொடுத்ததும் மனதில் நிற்கிறது.
அங்கும் ஆங்கிலப் படையினர் திமுதிமுவென நுழைந்தனர். அங்கு நடந்த போரில் சின்னமருது துப்பாக்கிக் குண்டுபட்டு கைதானார். பெரிய மருதுவும் கைது செய்யப்பட்டார். மருது பாண்டியர்களும் அவர்களது குடும்பங்களும் திருப்பத்தூர் கொண்டு சென்று காவலில் வைக்கப்பட்டனர். 24.10.1801 அன்று அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுடன் 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தார்கள், வீரர்கள் இரக்கமின்றி தூக்கிலிடப்பட்டனர். இது ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிடக் கொடுமையானது.

தூக்கிலிடுமுன் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு தூக்கிலிடப்பட்டபின் தங்களது உடல்களை காளையார் கோவில் கோபுர வாசலுக்கு எதிராகப் புதைத்து விட வேண்டும் என்றும், நாங்கள் இதுநாள் வரை எடுத்துமூலமாக, ஓலை மூலமாக வாய்மொழி மூலமாக கொடுக்கப்பட்ட மானியங்கள் தொடரவேண்டும் என்றும், அப்படி அறிவித்து இருக்கும் மானியங்களையும் உடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இது அவர்களது கொடைத் தன்மையையும் , நன்றி மறவாத் தன்மையையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.


அவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று ஆங்கிலேயக் கர்னல் அக்னியூ உறுதி அளித்தான். அதன்படி அவைகளை பின்பு நிறைவேற்றப்பட்டன.24-10-1801 அன்று தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வீரர்களின் உடல்கள் குவிந்திருந்த காரணத்தாலும், ஆங்கிலேயர்களிடம் ஏற்பட்ட பயம் காரணத்தாலும் மக்கள் இறந்தவர்களை அடையாளம் தெரிந்து அடக்கம் செய்ய துணியவில்லை, இரண்டு, மூன்று நாட்கள் கழித்து 27-10-1801ல் அன்று மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் உடலகளை காளையார் கோவிலுக்கு கொண்டுவரப் பெற்று அவர்களது விருப்பப்ட்ட கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் சின்னமருதுவின் மூன்றாவது மகன் துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக சுமத்திரா தீவிற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனோடு மேலும் 72 வீரர்கள் கைதிகளாக நாடு கடத்தப்பட்டனர். என்று கூறப்படுகிறது.நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்திராத ஒன்று அவர்கள் நவாப்பிற்கோ, ஆங்கிலேயருக்கோ மற்ற அரசர்களைப் போல், பாளையக்காரர்களைப் போல் கப்பம் கட்டவில்லை. சிவகங்கைச் சீமை பல வளங்களும் பெற்று சிறந்த நிர்வாகத்தின் கீழ் தனித்தொரு நாடாக - சீமையாக - விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்கள் இந்தியாவில் சுதந்டதிரத்திற்கு வித்திட்ட முதல் மாமன்னரக்களாவர். சுதந்திரமடைந்த குடியரசு பெற்ற இந்தியாவில் பல ஆண்டுகளாக அவர்களுக்கு மணி மண்டபமும் , அஞ்சல் தலை வெளியிடவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் கடந்த 24-10-2004 அன்று தான் அஞ்சல் தலை நடுவன் அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்டது. பல ஊரக்களை மக்களுக்கும் கோவில்களுக்கும் மாநியமாக வழங்கிய அவர்க்களுக்கு காளையார் கோவிலில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றுவது மாநில அரசின் கடமையாக நான் கருதுகிறேன். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தியாகிகளுக்கோ, தலைவர்களுக்கோ நினைவு நாள் ஒரு நாள் தான் கொண்டாடப்படும். மாமன்னர் மருது பாண்டியர்கள் இரட்டை மன்னர்கள் என்பதாலும், அவர்கள் தியாகிகள் என்பதாலும் அவர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 24ம் நாளும் 27ஆம் நாளும் முறையே தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையன்னை மருது பாண்டியர்களுக்கு வழங்கிய பெருமையாகும்..